இஸ்லாமியப் பார்வையில் காதலர் தினம்
https://www.facebook.com/allahoruvann
ஒரு சீரழிந்து போன சமுதயத்தின் சீர் கெட்ட நடைமுறைகளில் ஒரு முறைதான் இந்த காதலர் தினம்.
இஸ்லாமிய இளைஞர்களும் யுவதிகளும் இந்த காதல் எனும் வலையில் சிக்கி தத்தளிப்பதற்கு காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாத்தின் அடிப்படை அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமல் இருப்பதேயாகும்.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)
இதை நாம் சரியாக பின்பற்றினால் உண்மை காதலுக்கு நாம் சொல்லும் அர்த்தம் தேவையில்லை
காதலர் தினத்தின் பின்னணி எங்கள் தலைவர் நபி (ஸல் ) அவர்களுக்கு மாற்றம் செய்யுமாறு தூண்டுவதாகும்.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள்,இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் என்பவர்தான் இதனைக் முதன் முதலில் கொண்டாட ஆரம்பித்தார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர்.
வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.
கி.பி.1840-ல் எஸ்தர் ஏ.ஹவ்லண்ட் என்பவர் முதன்முதலாக அமெரிக்க காதலர்தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது.
இதன் பிறகு ‘வேலன்டைன் தொழிற்சாலை’ என்னும் பணம் பண்ணும் தொழிற்சாலை அமோக வளர்ச்சிப் பெற்றது.
இன்று ஜாஹிலிய்யாவின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்தில், அன்றாட மனித வாழ்வில் அது தனது பிடியை இறுக்கியுள்ளது. மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் இருக்கிறது.
இதனால்தான் முஸ்லிம்கள் வேலன்டைன்களையும் வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர்.
முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வரவேண்டும். நமது வாழ்வில் அன்னிய, அறியாமைக்கால சிறு கறை கூடப் படியாமல் பாதுகாக்க வேண்டும்.
வாலிபர்கள், வயோதிபர்கள், தம்பதிகள் என்று பலரும் பூச்செண்டு, பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். விஷேடமாக இளம் வாலிபர்கள் தங்களுடைய காதலை புனிதப் படுத்தக் கூடியதாக அத்தினத்தை பூஜிக்கிறார்கள்
தனது பிறந்த நாளை மறந்துவிட்டாலும், ‘காதலர் தினத்தை’ மறந்தவிட முடியாத நிலையில் இத்தினம் பிரசித்தம் பெற்றுவிட்டது.
சர்வதேச ரீதியாக பலதினங்கள் விஷேட தினங்களாக கொண்டாடப்படுகிறன.
- போதை ஒழிப்புத் தினம்
- சிறுவர், முதியோர் தினம்
- சூழல் பாதுகாப்புத் தினம்
- சேமிப்புத் தினம்
- மகளிர் தினம்
- அன்னையர் தினம்
- தொழிலாளர் தினம்
இத்தினங்கள் பற்றிய அறிவும் ஆர்வமும் காணக்கிடைப்பது அரிது.
”காதலர் தினம்” மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவான தினம்! இரவு 12 மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர் சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய அநாகரீகம். நாளொருவண்ணம், பொழுதொரு மேனியாக ஆண் பெண் உறவு (காதலர் காதலி உறவு) மாறிக்கொண்டேயிருக்கும். சீரழிந்துபோன ஒரு சமூகத்தின் நாற்றம் வீசும் கலாசாரத்தின் நாகரீகப் பெயர் காதலர் தினம். நாறிப்போன இந்த அனாச்சாரம் கீழத்தேய நாடுகளில் அரங்கேற்றப்படுகிறது.”நட்பு தூய்மையானது ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக் கூடாது” என்று அழகிய வார்த்தையில் காதல் பற்றி பேசலாம், கதைக்கலாம், வாதிக்கலாம். ஆனால் நடை முறையில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. காதலியுடன தனித்திருந்து சல்லாபித்த காட்சிகளை மறைமுகமாக புகை படம் எடுத்து வீடியோ பண்ணி ‘பிளக்மையில்’ பண்ணும் காதலன்; அதனை இன்டர்நெட்டுக்கு விட்டு பணம் பறித்து சம்பாதிக்கும் விடயத்தையும் பாரக்கிறோம். காதலாலும் அதன் புனித தினத்தினாலும் உருவான விபரீதங்கள்தானே இவைகள். ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால் அதற்காகத்தான் காதலர் தினம் என்றால் அப்படிப்பட்ட தினத்தை இஸ்லாம் கண்டிக்கிறது. உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்ணின் கற்பைப் பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!””தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31)
பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒரு நபித்தோழர் கணவனின் நெருங்கிய உறவினர் அப்பெண்ணிடம் செல்லலாமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் கணவரின் நெருங்கிய உறவினர் மரணத்தைப் போன்றவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் உக்பத் இப்னு ஹாமிர் (நூல்: புகாரி முஸ்லிம்)
உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம் )
ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை.
பிள்ளைகளின் விருப்பப் படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது.
இதற்காக இவர்கள் வேலிதாண்டிப் போக வேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை.
அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஆண் பெண் பேசக் கூடாது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது எனக் கூறவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது.
இதற்கு உதாரணமாக அல்குர்ஆன் அன்னை மர்யம் (அலை) அவர்களது வரலாற்றையும் மூஸா (அலை) அவர்களது வரலாற்றையும் சொல்லித்தருகிறது
(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார்.
நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18)
மூஸா நபி மத்யன் வாசிகளான இரு பெண்களுக்கு நீர் இறைத்துக் கொடுத்து உதவி புரிந்தார்.
”அது சமயம் அவ்விரு பெண்களில் ஒருத்தி மிக்க நாணத்தோடு அவர் முன் வந்து நீர் எங்களுக்கு தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு கொடுக்கும் பொருட்டு என் தந்தை உம்மை அழைக்கிறார்” எனக் கூறினாள். (28:23-25)
எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது. அதனைத் தாண்டிப் போகும் செயலை இஸ்லாம் தடை செய்கிறது.
”விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)
https://www.facebook.com/allahoruvann
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment