அகிலத்தாரின் ஏக இரட்சகன் அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாத்தோடு பிறக்கக் கிடைத்த பாக்கியத்தையும், உலகிற்கோர் அருட்கொடையாய், நபிமாருக் கெல்லாம் தலைவராய், முன்மாதிரிக் கோர் முழுமையாய் விளங்கிய முகம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தின் அங்கத்தவளுமாகிய என் அருமைச் சகோதரியே!
உன்னோடு சில நிமிடங்கள் என் நெடுநாளைய உளக்குமுறல்களை பகிர்வதற்காய் சந்தர்ப்பம் கேட்கிறேன்...... தருவாய் என்ற நம்பிக்கையோடு....
மனிதம் மறைந்து பண்பாடிழந்து கிடக்கும் புதிய தேசத்திலே உனது நிலைப்பாடு பற்றி கொஞ்சம் சிந்தித்தாயா? இன்று உலகளாவிய ரீதியாக 'பெண் என்பவள் சாதிக்கப் பிறந்தவள்' எனும் சுலோகத்தோடு இருவகை திசையில் பயணிப்போரில் உனது பாதை எதை நோக்கியது?
மார்க்கத்தை மண்ணிலே மலரச் செய்வதற்காய் உழைக்கும் மாண்புமிகு பெண்களில் முதல் பெண்ணா நீ? அல்லது மானுட தேசத்தின் அடையாளத்தை விலங்குணர்வுக்கு இட்டுச்செல்லும் பண்பிழந்த பெண்ணிலையின் பெரிய அங்கத்தவளா நீ? சகோதரியே சற்று சிந்தித்துப் பார்.
நாமெல்லாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்கள். எனும் நாமத்தைச் சுமந்த முஸ்லிம்கள் அல்லவா! மானுட வர்க்கத்தில் ஆணைப்போல நாமும் ஓர் அங்கத்துவம் அல்லவா! எமது இறைமறை ஈமான் கொண்டவர்களே! என விளித்துப் பேசுவது எம்மையும் நோக்கியல்லவா! 'மனித இனத்தின் ஒரு பாதி ஆணென்றால் மறுமாதி பெண்ணென்று நபிகளார் சொன்னார்களே' ஆம் அவ்வாறாயின் இஸ்லாத்துக்காய் உழைப்பது என்பதில் எமது வகிபாகம் எந்தளவு.
'விசுவாசம் கொண்ட ஆண்களும், விசுவாசம் கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாய் உள்ளனர். அவர்கள் பிறரை நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள்ளூ தீமையை விட்டு தடுக்கின்றார்கள்ளூ தொழுகையையும் நிறைவேற்றுகிறார்கள், ஸகாத்தும் கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். இத்தகையோருக்கு அல்லாஹ் அருள் புரிவான்'
என எமது பணி பற்றி அல்லாஹ் எடுத்தியம்பும்போது எதனை நோக்கி நாம் விரைகின்றோம். சகோதரியே சற்று உற்றுப்பார் எமது நிலையின் கோர விளைவுகள் இதோ தெரிகிறது. அலங்காரமாய் வீதியிலே உலாவருவதையும் ஆணோடிணைந்த ஷெய்த்தானிய உறவில் கொடிகட்டி நிற்பதையும், வெட்கமிழந்து வெறுமையாய் அலைவதையும், நாணமிழந்து மலிவாய் மந்திரிப்பதையும் பார்க்கின்றபோது உனக்கென்ன தோன்றுகின்றது.
அந்தோ! வரலாற்றில் நபிகளாரின் தூதுத்துவத்தை இம்மண்ணிலே முதன் முதலில் ஏற்று அவருக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய ஈமானியத் தாய் கதீஜா (ரழி) அவர்களின் வாரிசல்லவா நாங்கள் அவ்வாறாயின் மார்க்கம் போதிக்கப்படும் போது அதற்காய் உழைக்கா விட்டாலும் எத்தனை முறை அதை வாழ்க்கைக்காய் பயன்படுத்தினோம்.
சகோதரியே! புனிதமிகு இஸ்லாம் இப்புவியில் தழைத்தோங்க வேண்மென்பதற்காக தன் இன்னுயிரை மார்க்கத்திற்காய் துறந்த வீரத் தாய் சுமையா (ரழி) அவர்களின் இரத்த வாசத்தை எமது உணர்வு நுகரவில்லை யாயினும் இஸ்லாமிய தேசத்தின் உடல் பிளக்கப்பட்டு இரத்தங்கள் ஆறாக பீறிட்டோடும் இந்நாட்களில் அதற்காய் நீ போராடாவிட்டாலும் அந்நிலை பற்றி அறிந்தாயா?
புனிதத்திற்காக மணமிட்டு, இளமையை தூதரின் வழிமுறையைப் பின்பற்றுவதற்காக ; செலவழித்து, அறிவுக்கு உதாரணமாய், தூரருக்குச் சிறந்தவளாய், எமக்கோர் முன்மாதிரியாய் வாழ்ந்த அறிவுத் தாய் ஆயிஷா (ரழி) அவர்களின் தரத்தில் உனக்கு தியாகம் இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு நாளில் எத்தனை பக்கம் குர்ஆனைப் புரட்டினாய்?
சகோதரியே! இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும் போலிருக்கிறது. காஷ்மீரிய சகோதரியின் கற்பு கயவர்களால் சூறையாடப்படும் போதும்..... புனித தேசமாம் பலஸ்தீன தாய்கள் ஈன்றெடுத்த குழந்தைகள் இஸ்ரேலிய ராணுவத்தின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி சல்லடையாக்கப்படும் போதும்.... வரலாற்றுத் தேசத்தின் ஈராக்கிய நாகரீகம் ஈவிரக்கமற்ற மனிதப் பிறவிகளால் நாசம் செய்யப்பட்டு உம்மத்தின் ஒரு பகுதி பிணமாகக் கிடப்பதைக் காணும்போதும்சிரிய தேசத்தின் ஈமானிய இதயங்கள் கிழிக்கப்பட்டு இரத்த ஆடுகள் பீறிட்டு பாயும் போதும் ; ..... உனக்கு மட்டும் சினிமா, நாடகத்தொடர்களின் மாயைகளுக்கு முன்னாலும் தொலை பேசியின் தொல்லையான வார்த்தை களுக்குப் பின்னாளும் எப்படி சப்த்தமிட்டு சிரிக்க முடிந்தது.
அதற்காய் உன்னை மட்டும் குறை கூறவில்லை. நானும் சேர்ந்துதான் என்பதை மறுக்கவுமில்லை. அதற்காக நாமெல்லாம் ஸைனப் அல்-ஹஸ்ஸாலியாக, மர்வா ஷர்பினியாக, யுவோன் ரிட்லியாக, மர்யம் பர்கத்தாக மாறவேண்டுமென வற்புறுத்தவு மில்லை. குறைந்தது இஸ்லாத்தை விளங்கி அதன் படி வாழும் பெண்ணாக மட்டுமேனும் இப்போது எம்மால் வாழமுடிந்தால் இன்ஷா அல்லாஹ் அதுவே சிறந்ததொரு ஈமானிய சந்ததியின் தோற்றத்துக்கான உதிப்பாய் அமையும் எனக் கூறி குறையிருப்பின் மன்னிப்பாய் என்ற எதிர்பார்ப்பபோடு மீளும் உனது சகோதரி.....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment